சேலம் ஓமலூர் அருகே கோர விபத்து – இரு சக்கர வாகன ஓட்டி பலி, சாலை மறியல் முயற்சியால் பரபரப்பு!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி வட்டம் வேப்பிலை ஊராட்சியில் சாலை விபத்தில், 45 வயதுடைய சந்தனகுமார் என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அம்மனேரி பேருந்து நிறுத்தம் அருகே, தனது இருசக்கர வாகனத்தில் காடையாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த சந்தனகுமார் மீது,அதே சாலையில் சென்ற கனரக லோடு வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் சாலையில் கீழே விழுந்த அவரின் தலை மீது அந்த வாகனத்தின் முன்சக்கரம் ஏறியதால், அவர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.இவர் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்த நிலையில், இரண்டு மகன்களுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள், சந்தனகுமாரின் உடலை பார்த்து கதறி அழுததுடன், விபத்தில் ஈடுபட்ட வாகனத்தை சிறைபிடித்து, ஓட்டுநரை கைது செய்யக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஓமலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார், தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப ஒப்புக் கொண்டனர்.
இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0