திராவிட மாடல அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Mar 18, 2026 - 11:29
 2
திராவிட மாடல அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்ற கழகம் அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை சம்பவங்கள், மற்றும் போதைப்பொருள் புழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தற்போதைய அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவது சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது எனவும் தெரிவித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட செயலாளருமான P. தங்கமணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த கட்சி தொண்டர்கள் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். “சட்டம் ஒழுங்கு காக்க வேண்டும்”, “போதைப்பொருள் வியாபாரம் ஒழிக்க வேண்டும்”, “பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” போன்ற கோஷங்கள் முழங்கின.

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் P. தங்கமணி பேசுகையில், தமிழ்நாட்டில் தினந்தோறும் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். 

பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் நிலைமை உருவாகியுள்ளது என்றும், இது சமூகத்தின் பாதுகாப்பு நிலையை கேள்விக்குறியாக்குகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும், காவல்துறை தங்களது கடமையை சுதந்திரமாக செய்ய முடியாத சூழல் தற்போது நிலவி வருவதாகவும், பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் விரைவாக கைது செய்யப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். 

சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பின்றி வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சிறப்பாக இருந்ததாகவும், காவல்துறையினர் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் அதே நிலை இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும், தூத்துக்குடியில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, அந்த வழக்கில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியுடன் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, நல்ல ஆட்சியை தேர்வு செய்ய வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் எடப்பாடி K. பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0